மதுரை: பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள மதுரை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணியை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று (டிசம்பர் 24) தொடங்கி வைத்தார்.
அப்போது கிஷன் ரெட்டி துடைப்பம் மூலம் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார். முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கரோனா மீண்டும் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். பிரதமர் கூறியது போல கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தூய்மை இந்திய திட்டம் வெற்றியடைய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. முன்களப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பேசியதோடு, ஊடகவியலாளர்களுக்கு முகக்கவசங்களையும் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதுரையில் இருந்து அமைச்சர் கிஷன் ரெட்டி ராமேஸ்வரம் சென்றார்.
இதையும் படிங்க:திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்.. கரூர் தேர்தலில் திடீர் மாற்றம்!