கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா தமிழ்நாட்டில் கொலைசெய்ய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை இலங்கை காவல் துறை மறுத்தது. இச்சூழலில், சில தினங்களுக்கு முன் கோவை மாநகரக் காவல் துறை அங்கொடா லொக்காவின் கொலைசெய்யப்பட்டதை உறுதிசெய்தது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி என்பவர் தன்னுடைய உறவினர் பிரதீப் சிங் என்பவர் கோவை சேரன்மாநகர் பகுதியில் நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாகவும், அவரது இறப்பில் மர்மம் இருப்பதால் விசாரிக்க வேண்டும் என்றும் பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், பிரதீப் சிங்கின் ஆதார் அட்டையையும் அவர் கொடுத்துள்ளார்.
இதைக் கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல் துறையினருக்கு அது போலியான ஆதார் அட்டை என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இறந்த நபர் இலங்கையில் தேடப்படும் குற்றவாளியான அங்கொடா லொக்க என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், புகாரளித்த அதே நாளில் சிவகாமியும் ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் தியானேஷ்வரனும் லொக்காவின் உடலை மதுரைக்கு எடுத்துச் சென்று தகனம் செய்ததும் புலன் விசாரணையில் தெரியவந்தது. கோவையில் லொக்காவோடு கொழும்புவைச் சேர்ந்த அமானி தான்ஜி என்பவரும் வசித்துவந்ததும் கண்டறியப்பட்டது.
மேற்கொண்டு விசாரணையில் சிவகாமி சுந்தரி, தியானேஷ்வரன் ஆகிய இருவரும் லொக்கா, அமானி தான்ஜி ஆகியோரின் பெயர் மற்றும் நாட்டின் குடியுரிமையை மாற்றி மறைத்து ஆதார் அட்டை எடுக்கப் போலியான ஆவணங்களை அளித்ததும், போலி ஆதார் அட்டையை உண்மை என்று பயன்படுத்தி ஏமாற்ற உதவிசெய்து வந்துள்ளதும் உறுதியாகியது.
தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவருகிறது. அதன்படி, சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில், இன்று சிவகாம சுந்தரி தங்கியிருந்த மதுரை ரயிலார்நகர் பகுதியில் உள்ள நான்கு வீடுகளின் உரிமையாளர்கள், அண்டை வீட்டார்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி பரமசிவம் தலைமையிலான 15க்கும் மேற்பட்ட அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
சிவகாம சுந்தரி கடைசியாக தங்கியிருந்த சாந்திநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்ற சிபிசிஐடியினர் அங்கு அவரது வீட்டின் பூட்டை உடைத்து, சோதனையிட்டு ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும், அவரது வழக்கறிஞர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அங்கொடா லொக்கா மதுரையில் தங்கியிருந்தபோது யாருடனும் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும், அருகில் உள்ள நபர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர். சிவகாம சுந்தரியுடனான மொபைல் தொடர்பு, இணையதள தொடர்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்றது.
சட்டவிரோத பணபரிமாற்றம் ஏதும் நடைபெற்றுள்ளதா எனவும், மதுரையில் தங்கியிருந்த காலங்களில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்தும் சிபிசிஐடியினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன்: யார் இந்த அங்கொடா லொக்கா?