மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. தற்போது, விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவருகிறார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி (கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் (டிசம்பர்18) ஒரு மனுவினைத் தாக்கல்செய்திருந்தார்.
காவல் துறையினர் துன்புறுத்தல்
அந்த மனுவில், "கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நான். எனது மகன்கள் வசந்தகுமார், ரமணா, ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோர் கடந்த 17ஆம் தேதி அன்று ராஜேந்திர பாலாஜி மீது உள்ள வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் காவல் துறையினர் துன்புறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறை உயர் அலுவலர்களுக்குப் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மூவரிடமும் காவல் துறையினர் கையெழுத்துப் பெற்றுள்ளனர். எனவே கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும், எனது மகன்களையும், ஓட்டுநரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது எனக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
குடும்பத்தினரை தொந்தரவு செய்தது ஏன்?
இந்த மனு டிசம்பர் 18ஆம் தேதியன்று அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்பட்ட அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்காக குடும்ப உறுப்பினர்களைக் காவல் துறையினர் மிகவும் தொந்தரவு செய்துவருகின்றனர்.
எனவே காவல் துறையின் சட்டவிரோதச் செயலிலிருந்து குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, "குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளுங்கள், விசாரணை செய்யுங்கள்" என்றார்.
ஆனால், குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் அவர்களுக்கு முறையான அழைப்பாணை அனுப்பி விசாரணை செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்
இதனையடுத்து, இன்று இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், "இந்த வழக்கை எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்" எனக் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதி, மனு தாக்கல்செய்தவர்கள் எம்எல்ஏ, எம்பிக்களோ அல்லது முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்களோ அல்ல. அவ்வாறு இருக்கையில் ஏன் இந்த வழக்கை அங்கு மாற்ற வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத் தரப்பில், "மனு தாக்கல் செய்திருப்பவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் மீதான வழக்கிற்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை மாற்ற வேண்டும்" என வாதிடப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி இந்த வழக்கை எங்கு பட்டியலிடுவது என்பது தொடர்பாகத் தலைமை நீதிபதி பார்வைக்குக் கொண்டுசெல்ல உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜியை கைதுசெய்ய தீவிர தேடுதல் வேட்டை