மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றன. அதற்குப் போதுமான சட்ட அறிவு குறித்த விழிப்புணர்வு இன்மையே காரணம் ஆகும்.
ஆகவே குழந்தைகளுக்கு சட்ட உரிமை குறித்து பள்ளிப் பருவத்திலிருந்தே கற்பிக்க வேண்டியது கடமையாக உள்ளது. கேரள அரசின் பாடப்புத்தகத்தில் பள்ளிக் குழந்தைகள் உரிமை என்னும் தலைப்பில் வாழ்வுரிமை உள்ளிட்டவை குறித்து விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அதோடு குற்றத்தடுப்பு எண், இலவச உதவி எண், கேரள காவல் துறையினரின் உதவி எண் ஆகியவையும் அச்சிடப்பட்டுள்ளன. ஆகவே தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில், குழந்தைகளுக்கான உதவி எண், பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் விதிகள், காவல் துறை உதவி எண் போன்ற விவரங்களைச் சேர்க்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளி சங்கர் அமர்வு, இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாணி பவுடர் தயாரிக்கத் தடை விதிக்கப்படும் - மா.சு. தகவல்