மதுரை: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்கியசாமி பிரிட்டோ என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், " சத்தீஸ்கரைச் சேர்ந்த 33 பேர் சிவகாசியில் உள்ள ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்டு கம்பெனியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாக வீடியோ ஒன்றின் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றது.
அதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட உதவிகள் மையம் மற்றும் விருதுநகர் வருவாய் அலுவலர் உதவியால், டிசம்பர் 4ஆம் தேதி 2020ஆம் ஆண்டு 22 ஆண்கள், 9 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 33 பேர் மீட்கப்பட்டனர். அன்றைய தினமே, அவர்களின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு சத்தீஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.
கொத்தடிமைகள் தடுப்புச்சட்டப்படி மீட்கப்படுவோருக்கு விடுவிப்புச் சான்றிதழும், 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை அவர்களுக்கான விடுவிப்புச் சான்றும், தலா 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆகவே, சிவகாசியில் கொத்தடிமைகளாகப் பணியாற்றி மீட்கப்பட்ட 33 பேருக்கும் விடுவிப்புச் சான்றிதழ் மற்றும் தலா 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று (ஏப்ரல் 1) நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயக்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலர், கொத்தடிமைகள் மீட்பு துறை மாநில அலுவலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: விசாரணைக்கு ஆஜரான நடிகர் எஸ்.வி சேகர் 'நான் இன்று மௌன விரதம்' எனப் பேட்டி