தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ராமமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,"தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தீயணைப்பு, மீட்பு துறை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த வாடகை கட்டிடத்திலிருந்து தீயணைப்பு துறையின் வாகனங்கள் செல்வதற்கு முறையான வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளன.
இதனால் நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக கும்பகோணம் பகுதியில் 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் கால்நடைத்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு 2020ஆம் ஆண்டு அறிக்கையானது அனுப்பப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.
ஆனால் தற்போது வரை தீயணைப்பு, மீட்புத் துறை புதிய கட்டடம் கட்டுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து அலுவலர்களுக்கு மனு அளித்தும் தற்போது வரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. எனவே, கும்பகோணம் கால்நடை துறைக்கு சொந்தமான இடத்தில் தீயணைப்பு, மீட்பு துறைக்கு நிரந்தரமாக கட்டப்படும் கட்டடம் விரைவாக கட்டுவதற்கு கால நிர்ணயம் செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கும்பகோணம் தீயணைப்பு, மீட்பு துறை நிரந்தர கட்டட வேலைகள் சரியாக நடைபெறுவதாகக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்!