திருநெல்வேலியௌச் சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி 2 கிலோமீட்டர் முதல் 5 கிலோமீட்டர் வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்குள் குவாரி நடத்த வேண்டும் என்றால் கூடங்குளம் உள்ளூர் திட்டக்குழுவின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி வழங்க வேண்டுமென அரசாணை உள்ளது.
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட பகுதியில் சென்னையைச் சேர்ந்த தனியார் (தி ஹைடெக் ராக் புராடக்ட்ஸ் அண்டு அக்ரிகேட்ஸ் லிமிட்டெட்) நிறுவனத்துக்கு குவாரி நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் கூடங்குளம் உள்ளூர் திட்டக்குழுமத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. கல்குவாரி செயல்படுவதால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், அணுமின் நிலையத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.
எனவே உள்ளுர் திட்டக்குழுவின் ஒப்புதலின்றி, கூடங்குளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கல்குவாரி செயல்படத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குவாரி பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அல்லாமல் தொலைவிலேயே அமைந்துள்ளதால், உள்ளூர் திட்டக்குழுவின் ஒப்புதல் தேவையில்லை என வாதிட்டார். வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: புகார் அளிக்க வந்தவரை கடுமையாக நடத்திய பெண் காவலர்: வீடியோ வெளியாகி பரபரப்பு