திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்தினருடன், மதுரை அலங்காநல்லூரை நோக்கி மாருதி சுவிஃப்ட் ரக காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அய்யனகவுண்டன்பட்டி கிராமம் அருகே திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. சுதாகரித்துக்கொண்ட ராஜேந்திரனின் குடும்பத்தினர் காரிலிருந்து இறங்கித் தப்பினர். இந்த தீயானது மளமளவென பரவி கார் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது. அருகிலிருந்த கரும்பு தோட்டத்திற்கும் தீ பரவ ஆரம்பித்தது.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காரில் பற்றிய தீயை பரவ விடாமல் தடுத்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். உடனடியாக அலங்காநல்லூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தீயை அணைத்தனர். என்ஜினில் ஏற்பட்ட மின்வயர் உராய்வு காரணமாக இந்த விபத்து நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.