மதுரையைச் சேர்ந்த இப்னு என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை வாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிப்போன பேருந்து நிலையமாக பெரியார் பேருந்து நிலையம் இருக்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள பெரும்பான்மையான இடங்களுக்கு பேருந்து வசதி என்பது இங்கிருந்துதான்.
ஆனால் தற்போது பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மதுபானக் கடை பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இக்கடை பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இருப்பதால், கோயில்களில் வழிபட வருவோருக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் கடையின் அருகாமையில் சி.எஸ்.ஐ பள்ளிக்கூடம் மற்றும் தேவாலயமும் உள்ளது. இதனால் பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்ற கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே, பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையை அகற்ற மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் , புகழேந்தி ஆகியோர் மதுரை மாவட்ட அமர்வு இலவச சட்ட பணிகள் ஆணையம் இந்த மதுபானக் கடை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.