மதுரை: தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் 900 ஆயிரம் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் நிலையில், தற்போது 90 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நள்ளிரவு முதலே பேருந்து சேவை நிறுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் காரணமாக, பொதுமக்களின் வருகை சற்று குறைவாக உள்ளது. விரைவில் பிற பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரையில் உள்ள 16 போக்குவரத்து பணிமனைகளின் முன்பாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். அதன்படி, மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பாக போராட்டத்திற்காக ஒன்று கூடிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், பணிமனையில் உள்ளே இருந்து பேருந்துகள் வெளியே வரவிடாமல் பேருந்தை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இன்று (ஜன.9) மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, மதுரையில் வழக்கமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் எந்தவித இடையூறும் இன்றி, தங்கள் வழக்கமான பணிகளுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போக்குவரத்து தொழிசங்க வேலைநிறுத்தம்; மயிலாடுதுறையில் 83 சதவீத பேருந்துகள் இயக்கம்!
முன்னதாக, போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜன.8) சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் இன்று (ஜன.9) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, நள்ளிரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, ஏஐசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் மாநகர் பேருந்துகள் முழுமையாக இயக்கம் - எம்டிசி மேலாண் இயக்குநர் தகவல்!