மதுரை: 1881ஆம் ஆண்டு அமெரிக்க மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் மதுரை அமெரிக்கன் கல்லூரி. 1909ஆம் ஆண்டு முதல் தற்போதைய வளாகத்தில் கோரிப்பாளையம் பகுதியில் செயல்படத் தொடங்கியது. இக்கல்லூரியில் தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் யின்று வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 1912ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஜேம்ஸ் ஹால் அரங்கு 32 அடி உயர இரண்டு அடுக்கு கட்டிடத்தின் கீழ் உள்ள ஒரு அறையில் பல ஆண்டுகளாக பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் பகுதியாக இருந்து வருகிறது.
கடந்த மாதம் அந்த அறையை சுத்தம் செய்தபோது கட்டடத்தின் கீழ் பதுங்கு குழி போன்ற அமைப்பு ஒன்று கண்டறியப்பட்டது. அதில் ஒரு நுழைவு பகுதியும், அதில் இருந்து வெளியேற 4 வழிகளும் இருந்துள்ளன. இது குறித்து வரலாற்று அறிஞர்களை அழைத்து காண்பித்தபோது அது பதுங்கு குழி என்பது உறுதியானது.
1914-18 காலகட்டத்தில் நடைபெற்ற முதலாம் உலகப்போருக்கான பதற்ற காலத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்காக அன்றைய பிரிட்டிஷ் அரசின் உத்தரவின் பேரில் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மூன்று அறைகளை கொண்டதாகவும், பிரம்மாண்டமான அகலமுடைய கல் தூண்களும் 32 அடி உயர கட்டடத்தில் தாங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாம்பன் ரயில்வே பாலத்தில் பயன்படுத்தபட்டுள்ள இங்கிலாந்து நாட்டின் நியூகர்சல் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட இரும்புதளவாடங்கள் இந்த பதுங்கு குழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து பதுங்கு குழி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
பழமையான ஓலைச்சுவடி, நாணயம் மற்றும் மரங்களின் ஆயுட்காலம், மனித எலும்புக்கூடு ஆகியவற்றை வைத்து அருங்காட்சியகமாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இது விரைவில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிரைக் காத்துக்கொள்ள செல்போன் வெளிச்சத்தில் மைனஸ் 2 டிகிரி குளிரில் நடந்தோம்..!