மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளான அலங்காநல்லூர், நாகமலை புதுக்கோட்டை, கீழமாத்தூர், திருமங்கலம் போன்ற பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர்ச்சியாக நகை, பணம் திருட்டு போனதாக காவல்நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், திருட்டில் ஈடுபட்டதாக மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன், நாகேந்திரன் ஆகியோரை நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் அண்ணன், தம்பி ஆவர். அவர்களிடமிருந்து 110 சவரன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மகேந்திரன், நாகேந்திரன் மீது மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு , வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.