மதுரை கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல மருத்துவரின் மகன் விக்ரமின் வீட்டில், கடந்த மாதம் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பிஎம்டபிள்யூ காரை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அண்ணாநகர் காவல் துறையினர் திருடனைத் தேடிவந்தனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் சதீஸ்வரன் ஆகிய இருவருக்குமிடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஈஸ்வரன் சதீஸ்வரனை அடித்துக் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஈஸ்வரனை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து பிஎம்டபிள்யூ காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார் திருடன் முருகானந்தம் என்பவர் ஈஸ்வரனுக்கு இந்த பிஎம்டபிள்யூ காரை விற்றது தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த முருகானந்தத்தை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருடிய காரை கொலைக்கு பயன்படுத்தி சிக்கிக்கொண்ட சம்பவம் மதுரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.