மதுரை: நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவலையடுத்து, மியூக்கோர்மைகோசிஸ் எனும் கறுப்பு பூஞ்சை நோய்க்கு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தப் பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாக தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி, பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை உள்ளன.
கரோனா நிலவரம்
மதுரையை பொறுத்தவரை, இதுவரை 73 ஆயிரத்து 540 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 72 ஆயிரத்து 130 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 1,145 உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தற்போது 265 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கறுப்பு பூஞ்சை பாதிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரையில் பரவிய கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இதுவரை 360 பேர் கறும்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 280 பேர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும், தற்போது 30 பேர் கறுப்பு பூஞ்சைக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நோய்
இதையடுத்து மதுரையில் கறும்பு பூஞ்சை நோய்க்கு அரசு மருத்துவமனையில் இருவரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்த நிலையில், கரோனாவை தொடர்ந்து கறுப்பு பூஞ்சை நோயும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை முறையை கண்காணிக்க மருத்துவர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாளை முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை - ஏன் தெரியுமா?