திருச்சியில் எல்பின் என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்யும் நபர்களுக்கு ஒரே வருடத்தில் அந்த பணத்தை இரட்டிப்பாக தருவதாக ஆசைவார்த்தை காட்டி நிறைய முதலீடுகளை ராஜா என்பவர் சேர்த்துள்ளதாகவும், அவ்வாறு வாங்கப்பட்ட தொகையைத் திரும்ப தருவதில் முறைகேடு நடைபெறுகிறது எனக்கூறி, அவர் மீது ஏற்கனவே புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த அசோக், கோவிந்தராஜ் ஆகியோர் ரூ. 4.5 கோடிக்கு பட்டாசு வாங்கி எல்பின் ராஜா ஏமாற்றிவிட்டதாக மதுரை குற்றப்பிரிவு காவல்துறையினரிடன் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டிருந்த நிலையில், ராஜா தரப்பில் மேலும் பணத்தை தராமல் இழுத்தடித்து வருவதாக மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து திருச்சி கே.கே.நகர் பகுதியிலுள்ள எல்பின் ராஜா வீட்டிற்குச் சென்ற மதுரை காவல்துறையினர், நேற்று (ஆகஸ்ட் 18) அவரை கைது செய்து, மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து நீதிபதி கார்த்திகேயன் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, எல்பின் ராஜா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கிராம பஞ்சாயத்து உறுப்பினருக்கு வலைவீச்சு!