தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் பெரும்பங்கு வகித்தவை பனையும் பனை சார்ந்த பொருட்களும். அதில் பனம்பழம், பதநீர், பனங்கள், பனஞ்சர்க்கரை, பனங்கற்கண்டு, பனை வெல்லம் என பட்டியலிட்டுக் கொண்டே சென்றால், பனங்கிழங்கும் மிக முக்கிய பங்கு வகிக்கும். மதுரை மற்றும் தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் தொடங்கி பங்குனி வரை பனங்கிழங்கு சீஸன்தான்.
பெரியவர்கள், சிறியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் உண்ணத்தகுந்த கிழங்கு வகைகளில் பனங்கிழங்கும் ஒன்று. மதுரையின் இதயப்பகுதியாக விளங்கும் யானைக்கல்தான் பனங்கிழங்கு விற்பனை கேந்திரமாக உள்ளது.
சாதாரணமாக ஒரு கட்டில் 25 கிழங்குகள் இருக்கும். ஒரு கட்டு ரூ.50லிருந்து ரூ.150 வரை விற்பனையாகிறது. உடலின் வலுவுக்கு உரம் சேர்ப்பது மட்டுமன்றி, சர்க்கரை, நரம்புத்தளர்ச்சி, இரத்த அழுத்தம் உள்ளிட்ட குறைபாடுகளுக்கு ஏற்ற அருமருந்தாகத் திகழ்கிறது.
பனகிழங்கு விற்பனை செய்யும் குருவம்மாள் கூறுகையில், 'பனங்கிழங்குகளை குக்கரில் நன்றாக வேக வைத்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, காயவைத்து பொடி செய்து, மாவாக்கி பசும்பாலில் சேர்த்து தேங்காய் துறுவலோடு உண்டு வந்தால் ஒரு நாள் முழுவதும் பசியின்றி இருக்கலாம்.உடலிற்குத் தேவையான ஆற்றலையும் பனங்கிழங்கு தருகிறது' என்றார்.
மதுரை மாவட்டம் மட்டுமன்றி சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும் பனங்கிழங்குகள் மதுரைக்குள் இறக்குமதியாகின்றன. இந்த ஆண்டு விளைச்சல் மிகவும் குறைவு என்பதால் அதிக விலைக்கு பனங்கிழங்கு விற்கப்படுவதாக மற்றொரு வியாபாரி வேதனையுடன் கூறினார்.
நார்ச்சத்து மிக்கது மட்டுமன்றி புரதச்சத்தும் அதிகமுள்ள உணவாக பனங்கிழங்கு இருப்பதால், குழந்தைகளின் உணவுப் பண்பாட்டில் பனங்கிழங்கு இடம்பெற பெற்றோர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பனங்கிழங்கு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: