மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ளது ஸ்ரீ கள்ளழகர் திருக்கோவில். இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும். சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி மதுரை நகரில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்க வருகிறார். இந்த விழா மதுரையில் வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதேபோல் ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் மிகவும் புகழ் பெற்றது. அந்த வகையில் மதுரை அழகர்கோயில் ஆடி திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் கள்ளழகர் தங்கப் பல்லக்கிலும், மாலையில் சிம்மம், அனுமன், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் இன்று விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஶ்ரீதேவி, பூதேவியுடன் கள்ளழகர் தேரில் எழுந்தருளினார். ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளியுள்ள அழகரின் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் பக்தர்கள் அதிக அளவில் கூடினர்.
இதையும் படிங்க: உலக யானைகள் தினம்: அசைந்தாடும் அதிசயம்... யானைகளை கண்டால் குழந்தைகள் குதூகலம்...