உலகப்புகழ் பெற்ற மதுரையின் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த நிகழ்ச்சி மதுரைக்கு அருகில் உள்ள தேனூர் கிராமத்தில் நடைபெற்று வந்தது. அதனை அப்போது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னர் மதுரை நகருக்கு மாற்றினார்.
கிராம மக்கள் விட்டுக் கொடுத்தால், இந்த விழா இன்றளவும் மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெருவிழாவாக நடைபெற்று வருகிறது. ஆனால் தேனூர் கிராம மக்கள் அந்தப் பாரம்பரியத்தை கைவிடாமல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் தேனூர் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளச் செய்யும் நிகழ்வு நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான கள்ளழகர் வைபோகம் தேனூர் கிராமத்தில் இன்று காலை நடைபெற்றது. அப்போது தங்க குதிரையில் எழுத்தருளிய கள்ளழகர் வைகை ஆற்றில் மண்டுக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் உள்ளிட்ட கலை விழாக்கள் நடத்தப்பட்டது. இதில், தேனூர் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.
இது குறித்து பட்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில், கடந்த 375 ஆண்டுகளுக்கு முன்பாக எங்களது கிராமத்தில் நடைபெற்ற இந்த விழா இன்று மதுரைக்கு மாற்றப்பட்டாலும், எங்கள் கிராமத்தின் பாரம்பரியத்தை கைவிடாமல் இன்று வரை நாங்களும் தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்றார்.
தேனூரின் முக்கிய பிரமுகர் நெடுஞ்செழியன் பாண்டியன் கூறுகையில், இந்த விழா தேனூர் கிராமத்தில் ஒற்றுமையையும் பாரம்பரியத்தையும் போற்றும் பண்பாட்டையும் நினைவுபடுத்துகிறது. தொடர்ச்சியாக நாங்கள் இந்த விழாவை நடத்துவோம் என்றார்.