மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் பொதுமக்கள் சார்பாக பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 22.12.2020அன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அவனியாபுரம் பொதுமக்கள் சார்பாக நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு சம்பந்தமாக 02.01.2021 அன்று கோட்டாட்சியர் முன் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் எந்த முடிவும் எட்டப்படாமல் மாவட்ட ஆட்சியர் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு பரிந்துரைக்கப்பட்டது.
இதனையொட்டி அனைத்துக் கிராம பொதுமக்கள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் பழைய கமிட்டி உறுப்பினர்களை நீக்கிவிட்டு, புதிய கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து நேற்று(ஜனவரி 4) புதிய ஜல்லிக்கட்டு கமிட்டி உறுப்பினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, இதுகுறித்தான விருப்ப மனு அளித்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் இந்த மனுவினை ஏற்று, கிராம மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவனியாபுரம் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொண்டனர்.
இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி: மிக இனிப்பான செய்தியை தந்த தமிழ்நாடு அரசு