மதுரை: தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 12ஆம் வகுப்பு பயின்ற அரியலூர் மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையில், மாணவியை மதம் மாறச் சொல்லி சிலர் வற்புறுத்தியதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பான காணொலி காட்சி ஒன்றும் வைரலானது. இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று (ஜன.28) விசாரணைக்கு வந்தது. அப்போது, “மாணவியின் தாயார், தந்தை மற்றும் மாணவியின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்த முத்வேல் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் வாதாடிய அரசு தரப்பு வழக்குரைஞர், “வழக்கின் விசாரணை சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. 50க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. எனவே ஒரு வார கால அவகாசம் தேவை. வழக்கில் திருச்சியைச் சேர்ந்த சிஸ்டர் ரோஸி மற்றும் வழக்கறிஞர் பகவன் தாஸ் ஆகியோர் கொடுத்த இரண்டு இடையீட்டு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அரசு தரப்பில் 53 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு உள்ளன. நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து விசாரணைகளும் நேர்மையாக நடைபெற்று வருகின்றன. வீடியோ எடுத்த முத்துவேல் மற்றும் தற்கொலை செய்துகொண்ட குழந்தையின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
முத்துவேல் எத்தனை வீடியோ எடுத்தார், எத்தனை மொபைல் பயன்படுத்தினார் என்பதை கூற மறுக்கிறார். வழக்கை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்றனர்” என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ”காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை. எனவே விசாரணையை சிபிசிஐடி அல்லது வேறு ஒரு பிரிவிற்கு மாற்ற வேண்டும்.
தடயவியல் துறை தரப்பில், ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடய அறிவியல் துறைக்கு மொபைல் அனுப்ப வேண்டும்” எனக் கூறப்பட்டது.
இதனைப் பதிவு கொண்ட நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிப்பு!