சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் கீழடி அருகே உள்ள கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கூடுதலாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மையில் கீழடி அகழாய்வில் பெரிய விலங்கு ஒன்றின் எலும்புப் பகுதி கண்டறியப்பட்ட நிலையில், கொந்தகை அகழாய்வில் மனிதர்களின் மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள் உள்ளிட்டவை அங்குள்ள முது மக்கள் தாழிகளில் கிடைத்து வருகின்றன. அதேபோல் மணலூர் அகழாய்வில் அடுப்பு ஒன்றும் அவற்றுக்குள் வெள்ளைக் களி மண்ணால் ஆன ஜாடிகளும் கண்டறியப்பட்டன.
இதற்கிடையே அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் நிறைய பானை ஓடுகளும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை சட்டிகளும் கிடைத்தன. மேலும், தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கி.பி பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் கூறுகையில், "கீழடி, அதனை சுற்றி அமைந்துள்ள பண்பாட்டு மேடுகளை உள்ளடக்கிய கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
அகரம் கிராமத்தில் நடைபெறும் அகழாய்வில் தற்போது தங்க நாணயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கி.பி 17ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த இந்தத் தங்க நாணயம், ஒரு சென்டிமீட்டர் அளவும், 300 மில்லி கிராம் எடையையும் கொண்டுள்ளது. இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் நாமமும் நடுவில் சூரியனும் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன.
பின்பக்கத்தில் 12 புள்ளிகள், அதன் கீழ் இரண்டு கால்கள், இரண்டு கைகளுடன் கூடிய உருவமும் காணப்படுகிறது. இந்தக் காசு வீர ராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டு உள்ளது" எனத் தெரிவித்தார்.
தற்போது அகரம் தொல்லியல் மேட்டில், தொல்லியல் அலுவலர் சக்திவேல் தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் களப்பணி செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெரிய அளவிலான எலும்புக்கூடு