மதுரை: உலகப் புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். பல நூற்றாண்டு பழமையும், சிறப்பும் வாய்ந்த இந்த கோயிலின் கோபுரம் மற்றும் கட்டடக் கலையும், சிற்பக் கலையும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. மேலும் மதுரை நகரின் மையத்தில் சற்று ஏறக்குறைய 15 ஏக்கர் பரப்பளவில் மீனாட்சி கோயில் அமைந்து உள்ளது.
இந்த கோயிலின் சிறப்பம்சங்களை விளக்கக் கூடிய வகையில் வரைபடம் ஒன்றை வெளியிட பொது மக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுரங்கள் மற்றும் கோயில் வளாகம் முழுவதையும் நவீன கணினி வரைபடம் (Computer Diagram) தயாரிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ள. தற்போது அதற்கான ஒப்பந்த புள்ளியை கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் கோயில் வளாகத்தில் இருக்கக் கூடிய கோபுரங்கள், நுழைவு வாயில்கள், கோவில் விமானங்கள், பொற்றாமரைக் குளம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பகுதிகளை கணினி வரைபடமாக உருவாக்குவதற்காக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கோயில் நிர்வாகம் சார்பாக ஒப்பந்தப் புள்ளி கோரி அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் தகுதி உள்ள நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும். இந்த வரலாற்றுப் பெருமையும், ஆன்மிகச் சிறப்பும் வாய்ந்த மீனாட்சி அம்மன் கோயில் திருத்தலத்தை வரைபடம் வாயிலாக பொதுமக்கள் அனைவரும் காண்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது" - பி.ஆர் பாண்டியன் ஆவேசம்!