மதுரை: உலக மரபு வாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை மற்றும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெறும் தமிழக நடுகல் மரபு கண்காட்சியை தொழில்துறை மற்றும் தமிழ் பண்பாடு, தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "மனித இனம் தோன்றியதாகக் கூறப்படும் பழைய கற்காலமான 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் மனித இனம் தோன்றி இருக்கிறது என நிறைய ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. பொதுவாக நிலப்பரப்பில் ஒரு இனம் தோன்றி அதன் பண்பாட்டு தொடர்ச்சியாக முழுமை பெறாமல் ஆங்காங்கே இடைவெளிகள் இருக்கும்.
ஆனால் மாறாக, தமிழ் சமுதாயம் பழைய கற்காலம் தொடங்கி இரும்பு காலம், சங்க காலம் என எல்லா காலகட்டங்களில் தமிழ் சமுதாயத்தின் தொடர்ச்சி இருக்கிறது. தமிழகம் முழுதும் நடைபெறும் அகழாய்வுகள் புதிய சான்றுகளைத் தருகின்றன. மயிலாடும்பாறையில் நடைபெற்ற ஆய்வு அடிப்படையில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் பயன்பாடு அறிந்த முதல் சமுதாயமாக தமிழ் சமுதாயம் இருக்கிறது.
புள்ளிமான் கோம்பை - தாதப்பட்டி கல்வெட்டு கிடைத்த பிறகு தான் சங்க காலத்தில் நடுகல் மரபு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அசோகன் பிராமி எழுத்து மூலமாக தான் தமிழ் எழுத்துகள் வந்தன என கூறப்பட்ட நிலையில் கீழடி ஆய்வு முடிவில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களுக்கு தனியாக ஒரு எழுத்து முறை இருந்தது கண்டறியப்பட்டது.
நடுகற்கள், அரசனை கொண்டாடும் கல்வெட்டுகளாக இல்லாமல் போரில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வீரனின் நினைவை போற்றும் வகையில் மக்கள் அவற்றை வணங்கி வந்துள்ளனர். தமிழகத்தில் முன்னோர்களை நடுகற்கள் வைத்து இன்று வரை வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தின் வரலாற்றை கல்வெட்டுகள், சங்க கால நாணயங்கள், அகழாய்வு மூலமாக அறிய முடிகிறது. விவசாயத்தை காப்பாற்றிய வீரனுக்கு கூட தமிழர்கள் நடுகல் எடுத்து வணங்கி வருகின்றனர்.
அகழாய்வு பழம் பெருமைகளை பேசுவதற்காக அல்ல. தமிழ் சமுதாயம் எழுத்து, கல்வி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்கியது என்பதை எடுத்துக்காட்டவே. பழந்தமிழர் வரலாற்றை வெளிக் கொணர தமிழக முதலமைச்சர் உறுதுணையாக இருக்கிறார். மன்னர் திருமலை நாயக்கர் மஹாலை புனரமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள குடைவரை கோவில்கள், கோட்டைகள் பராமரிக்கப்பட உள்ளன” என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “மைசூரிலிருந்து சென்னை வந்துள்ள 13 ஆயிரம் கல்வெட்டு மைப்படிகளைப் பாதுகாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அவை அனைத்தையும் நல்ல முறையில் பெறப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக ஆய்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிகின்றன.
மத்திய தொல்லியல் துறையுடன் இனைந்து கல்வெட்டு ஆய்வு செய்ய தமிழக தொல்லியல் துறை தயாராக உள்ளது, மைசூரில் இருந்து வந்துள்ள கல்வெட்டுகள் மூலம் தமிழர்களின் தொன்மையையும், பல புதிய தகவல்களையும் அறிய முடியும். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள கல்வெட்டுகள் குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன் முடிவில் அவை அனைத்தும் ஒரே தரவாக உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கீழடி அருங்காட்சியக கட்டடப் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து உள்ளது. அங்கு கிடைக்கப்பெற்ற அகழாய்வுப் பொருட்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தும் பணிகள் முடிவடைய 2 மாதங்கள் ஆகும். கீழடி அகழாய்வில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன, அதில் மிக முக்கியமான பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.
அதன் பின்னர் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைப்பார். கீழடி அகழாய்வு தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தேவைப்பட்டால் அடுத்த கட்ட அகழாய்வு கடந்த கால அகழாய்வின் முடிவுகளின் அடிப்படையில் தொடங்கப்படும். கீழடி மட்டுமல்லாமல் வைகை நதிக்கரை நாகரிகப் பகுதிகளில் அகழாய்வு விரிவுபடுத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடும் காசியும் காலத்தால் அழியாத கலாச்சார மையங்கள் - பிரதமர் மோடி