மதுரை மாவட்டம் அழகர்கோயில், கள்ளழகர் திருக்கோயிலில், ஒவ்வொரு ஆடி அமாவாசைக்கும், சுந்தரராஜ பெருமாளாகிய கள்ளழகருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு கருடவாகனத்தில் எழுந்தருளி அழகர்கோயிலின் காவல்தெய்வமாக விளங்கக்கூடிய பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்.
இதனையொட்டி மதுரை மட்டுமல்லாது, சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், கிராமப்புற பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்து வந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.
பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற அழகர்கோயில் ஆடி அமாவாசைத் திருவிழா இந்த ஆண்டு கரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி திருக்கோயிலில் பக்தர்கள், உபயதாரர்கள் அனுமதியின்றி, கோயில் உட்பிரகாரத்தில் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, சிறப்பு அலங்காரமும் ஆராதனையும் செய்யப்பட்டது.
பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடர்ந்து, பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கதவுகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சந்தனம் சாத்தும் நிகழ்ச்சியையொட்டி முறைதாரர்கள் தரும் சந்தன குடங்களை, திருக்கோயில் சார்பாக கோட்டைவாசலில் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் பட்டர்கள், கோயில் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மாண்பை இழந்துதவிக்கும் புல்லூத்து; அடையாளத்தைத் தொலைக்கிறதா மதுரை மாநகர்?