எம்ஜிஆர் நினைவு நாள்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதிமுக நிறுவனத்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.
அதிமுகவிற்கு நாம் தமிழர் கட்சி ஒரு பொருட்டல்ல...
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் இருந்தார் என்பதால் சீமான் அவரைப் பாராட்டி இருக்கிறார். சீமானுடைய கொள்கைகள் வேறு. எம்.ஜி.ஆரின் கொள்கைகள் வேறு. எம்.ஜி.ஆரின் கொள்கைகள் மக்களுக்கு ஈவது, கொடை அளிப்பது, நல்வழிப்படுத்துவது.
ஆளுங்கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ வருவதற்கு வழி இல்லாதவர் சீமான். எல்லோரும் புரட்சித்தலைவர் ஆட்சியை விமர்சித்தது போல, அவரும் விமர்சிக்கிறார். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற நெகட்டிவ் அப்ரோச் செய்யும் சீமானை நாங்கள் பொருட்படுத்தவில்லை. இந்தப் போக்கால் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இம்முறை குறைவாகவே சீமானுக்கு வாக்குகள் கிடைக்கும்.
ஸ்டாலினுக்கு தேர்தல் பயம்?
மு.க. அழகிரி பிறர் வலியுறுத்தினால் தனிக்கட்சி தொடங்குவேன் எனக் கூறுவது அவரது சொந்த கருத்து. அது அவர்களுக்காக அல்லது மக்களுக்காகவா? என்பது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொங்கல் பரிசோடு இரண்டாயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்குகிறார்.
முதலமைச்சராகும் ஆசையோடு சுயநலத்திற்காக மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து இருக்கிறார். தேர்தல் நெருங்குவதால் மு.க. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது”என்றார்.
ஆசியாவின் முதல் பணக்கார குடும்பம்
”பல முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் தயாராக உள்ளதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். இந்திய துணைக் கண்டத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான். தங்கள் பக்கம் முழுக் குறைகளையும் வைத்துக் கொண்டு எங்களை கை நீட்டிப் பேசுவது எந்தவிதத்திலும் பொருந்தாது.
அதிமுக அரசு மக்களுக்காக செய்யும் நன்மைகளை முடக்கிப் போடுவதற்கு திமுக முயற்சிக்கிறது. குறுகிய மனப்பான்மையோடு ஸ்டாலின் முயற்சிக்கிறார். அவரது முயற்சிப் பலிக்காது. ஆசியக் கண்டத்திலேயே முதல் பணக்காரனாக இருப்பது கருணாநிதியின் குடும்பம் என்பது நாடறிந்த ஒன்று.
திமுக ஆட்சியில் டெண்டர் முறையில் ஊழல் இல்லை என அவர் சொல்கிறார். அதே காண்ட்ராக்டர்கள்தான் இப்போதும் டெண்டர் எடுக்கிறார்கள் என்பதால் டெண்டர் முறையில் ஊழல் இல்லை என ஸ்டாலினே ஒத்துக் கொள்கிறார்.
அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு
வரும் 2021 தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிப் பெறும், 50 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றிப் பெறுவோம் என நினைத்திருந்த நிலையில், இப்போது 70 விழுக்காடாக உறுதியாகி உள்ளது.
கமல்ஹாசன் தன்னை யாரேனும் கூட்டணியில் சேர்க்க மாட்டார்களா? என அலைபாய்கிறார். வேறு எந்த நடிகரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது.
எம்.ஜி.ஆர் ஒருவர் மட்டுமே வாழ்விலும் நல்லவராக இருந்தார். திரைப்படங்களிலும் நல்லவராக நடித்தார்” என எம்எல்ஏ., ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடிவேல் பாணியில் சீமானைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!