மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் 3வது முக்கிய நகரமாக மதுரை மாநகரம் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன்.
அதை நினைவுப்படுத்தும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில் 1999ஆம் ஆண்டில் 15 அடி உயரம், 3 டன் எடையில் 3 மீன்கள் கொண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டபோது, அந்த மீன் சிலை அகற்றப்பட்டது.
பின்னர் பணி முடிந்து பல மாதங்களாகியும் மீன் சிலை மீண்டும் அமைக்கப்படவில்லை. எனவே மதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் 3 மீன்கள் வெண்கல சிலை மற்றும் நீருற்று அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரையில் மீன் சிலை அமைக்க வேறு இரு இடங்களை தேர்வு செய்ய மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: Rope pulling: ரோப் புல்லிங் மரியாதை என்றால் என்ன?
இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் கொண்ட அமர்வு, "மதுரை ரயில் நிலையத்தில் பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையம் காரணமாக ஏற்கனவே இருந்த இடத்தில் மீன் சிலை அமைக்க முடியாது. ஆனால், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் அடையாளமாக மக்கள் மீன் சிலையைப் பார்க்கின்றனர். இதனால் மதுரையில் மாநகராட்சி எல்லைக்குள் முக்கிய சந்திப்பு அல்லது முக்கிய இடத்தில் மீன் சிலை அமைக்க வேண்டும்.
மீன் சிலை அமைக்க தகுதியான இடத்தைத் தேர்வு செய்ய மூத்த வழக்கறிஞர் காந்தி தலைமையில் மாநகராட்சி ஆணையர், மதுரை எம்பி, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பேரவைத் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், போக்குவரத்து இணை ஆணையர், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர், நெடுஞ்சாலை தலைமை பொறியாளர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இந்தக்குழு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்த வேண்டும். மதுரையில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி மீன் சிலை அமைப்பதற்கு தகுதியான இடத்தை ஒரு மாதத்தில் தேர்வு செய்து 2023 ஆகஸ்ட் 7இல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மீன் சிலையை ரயில்வே நிர்வாகம் பாதுகாக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தேவையற்ற கேள்வி கேட்க வேண்டாம்.. கடுப்பான சரத்குமார்