மதுரை: வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள அதிமுகவின் மாநாட்டையொட்டி நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "கடலூர் விளைநிலத்தில் என்எல்சி விரிவாக்கப்பணி குறித்து, எங்கள் கட்சியின் சார்பாக நாங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம். மக்களுக்கான பணியில் அதிமுகதான் எப்போதும் முன்னணியில் இருக்கும். நாங்கள் விளம்பரத்திற்காகப் போராட்டம் செய்பவர்கள் அல்ல.
திமுக நல்லாட்சி தருகிறது என்று முதலமைச்சரே கோயபல்ஸ் போன்று தனக்குத்தானே பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில், மக்கள் முகம் சுளித்துப் பேசினால்கூட, நீங்கள் சிரித்துப் பேசுங்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார், ஸ்டாலின். தன்னுடைய ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சருக்கே தெரிந்துள்ளது.
அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது. டாஸ்மாக் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கலாம் என்பதை கண்டுபிடித்ததே திமுகதான். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்பவர் என்று பெயரெடுத்த கருணாநிதியின் மகன்தான் தற்போது தமிழ்நாட்டை ஆள்கிறார். உரிமம் இல்லாமல் மதுக்கடைகள் நடத்தி, அதன் வருமானத்தின் மூலம் ஊழல் செய்கிறவர்கள் தான் திமுகவினர்.
அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை என்று சொல்லிவிட்டு, இப்போது பல நிபந்தனைகளைத் தெரிவித்துள்ளார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் கிரைண்டர், மின்விசிறி, மிக்ஸி ஆகியவற்றை எல்லோருக்கும் வழங்கினோம். அரசுப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டது.
அதேபோன்று அரசு மருத்துவமனையில் மருந்துப் பெட்டகம் பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தந்தையார் ஆட்சியிலிருந்தபோதுகூட அனைவருக்கும் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கினார். ஆனால் தற்போது மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களையெல்லாம் நிறுத்திவிட்டார்கள்.
அதிமுக ஆட்சிக்காலத்தின்போது குடும்பம் ஒன்றுக்கு ரூ.2,61,000 கடன் வைத்துவிட்டுப் போனதாக முதலமைச்சர் ஸ்டாலின் புள்ளிவிவரம் கூறினார். ஆனால், வெறும் இரண்டே ஆண்டுகளில் அதே கடன் ரூ.3,35,000 ஆக திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது. ஏறக்குறைய ஏழரை லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டின் கடனாக உள்ளது.
திமுகவில் உள்ள அமைச்சர்கள் மட்டுமே பயனடைந்து வருவதாக அக்கட்சியின் அடிமட்டத் தொண்டன் குமுறிக் கொண்டிருக்கிறான். எந்தக் காங்கிரஸ் கட்சி கருணாநிதியின் மனைவியிடம் விசாரணை செய்து கொண்டே சீட்டு பேரம் நடத்தியதோ, அதே காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கில் வெல்வதற்கு திமுக அத்தனை பாடுபட்டுள்ளது.
இதுதான் இவர்களின் வீராப்பா..? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பயமாக இருக்கும். அதுபோன்றுதான் அமலாக்கத்துறையைப் பார்த்து இவர்கள் பயப்படுகிறார்கள். செந்தில் பாலாஜிக்கு கிடைத்த மரியாதை பொன்முடிக்கு ஏன் கிடைக்கவில்லை?" என கேள்விகளாக அடுக்கினார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
இதையும் படிங்க: ஆங்கில கால்வாயை இருமார்க்கத்திலும் நீந்தி கடந்து சாதனைப் புரிந்த தமிழக மாணவன்