மதுரை: திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி அய்யன் திருவள்ளுவர் இலக்கியப் பேரவை சார்பில் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திண்டுக்கல் லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்புறம் காம்பவுண்ட் சுவரை ஒட்டி அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பெற தடையில்லாச் சான்று பெற்று உள்ளனர். அதன் அடிப்படையில், அமைப்புக்குழு சார்பில் சிலைக்கு பீடம் அமைத்து எங்கள் செலவில் சிலையைப் பீடத்தில் 2021ஆம் ஆண்டு ஆக.10ஆம் தேதியன்று நிறுவி விட்டோம்.
ஆனால் திடீரென திண்டுக்கல் காவல்துறை அதிகாரிகளும் போக்குவரத்து போலீஸ்காரர்களும் பெருந்திரளாக அந்த இடத்திற்கு வந்து, எந்தவித காரணமும் இன்றி சிலையைக் கீழே இறக்கி தரையில் வைத்து விட்டனர். இது தமிழினத்துக்கு ஏற்பட்ட அவமானமாகும். சிலை அமையப்பெற்ற இடம் தகுந்த அனுமதியின் பேரில் பெறப்பட்டது. எந்த வித இடையூறும் ஏற்படுத்தாததால், நிறுவப்பட்ட சிலையை காவல்துறையினரே முகாந்திரமுமின்றி இறக்கி வைத்துள்ளனர்.
எனவே, பீடத்தில் இருந்து இறக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவரது சிலையை, மீண்டும் பீடத்தில் நிறுவிட அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த பொது நல வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், உள்ளாட்சி, பள்ளி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அனுமதி வழங்கி விட்டனர்.
மாவட்ட ஆட்சியர் மட்டும் அனுமதி மறுக்கிறார் என வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், இளைஞர்களுக்கு வழி வழியாக வழிகாட்டியாக இருக்கும் அய்யன் வள்ளுவர் உலகத்திற்கு நல்ல கருத்துகளை போதித்தவர் என கருத்து தெரிவித்தனர். சிலை திறப்பு விழா எப்போது என்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: இலங்கையை சேர்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை ; உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து...