சிவகங்கையைச் சேர்ந்த சுப்பையா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”நான் திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனில் 12ஆவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனில் மொத்தம் பதினேழு வார்டுகள் உள்ளன.
இதில் திமுக ஆறு இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், அதிமுக மூன்று இடங்களிலும் , தமமுக இரண்டு இடங்களிலும், சுயேச்சை நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. திருப்புவனம் ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
கடந்த 11ஆம் தேதி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலுக்காக அனைத்து கவுன்சிலர்களும் வந்திருந்தனர். காலை 11 மணிக்கு தேர்தல் என்ற நிலையில் 10:15 மணியளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தைக் காட்டி தேர்தலை நடத்தாமல் தேர்தல் அலுவலர் ஒத்திவைத்தார்.
அவரின் இந்தச் செயல் ஏற்புடையதல்ல. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்துள்ளார். எனவே சிறப்பு மாவட்டத் தேர்தல் அலுவலரை நியமனம் செய்து விரைவில் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்த உரிய உத்தரவிட வேண்டும். மேலும் வழக்கறிஞர் குழு அமைத்து, தேர்தலைக் கண்காணிக்கவும் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (11.3.2020) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: துணைநிலை ஆளுநர் அதிகார வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து