நெல்லையைச் சேர்ந்த தமிழ்செல்வி 2008இல் அவரது வீட்டு மாடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது வாயினுள் துண்டை திணித்து நைலான் கயிறால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது. இதில் வசந்த், ராஜேஷ் ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றம் குற்றவாளிகள் இருவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. காவல் ஆய்வாளர் தரப்பில் இந்தத் தண்டனையை உறுதி செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இருவரையும் இன்று நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் இருவரும் இன்று நேரில் ஆஜர்படுத்தபட்டனர்.
அப்போது நீதிபதிகள், ”உங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய நீதிமன்றத்தில் அனுமதி உள்ளது. உங்களுக்கு வழக்கறிஞர்கள் இருந்தால் வழக்கில் நியமனம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் நாங்கள் இலவச சட்ட உதவி வழக்கறிஞரை நியமனம் செய்கிறோம்” என்று குற்றவாளிகளிடம் கூறினர்.
இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் தாங்களே வழக்கறிஞரை நியமனம் செய்துகொள்வதாகக் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தூக்குத் தண்டனையை உறுதிசெய்யக்கோரிய வழக்கு, தண்டனையை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீடு வழக்கு ஆகிய இரு வழக்குகளையும் மார்ச் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகப் போடப்பட்ட சாலை : பொதுமக்கள் தடுத்து நிறுத்தம்