மதுரை மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில், மதுரையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்புப் பணிகள் குறித்தும், மாவட்டத்திற்கு வரவுள்ள சிறப்பு மருத்துவக் குழு குறித்தும் மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்களுடன் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டில் கரோனாவுக்கு அளிக்கப்படும் உயர்தர சிகிச்சையின் தரத்தாலே நோய்த் தொற்று கட்டுக்குள் உள்ளது. குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மதுரையில் முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கியதைப் போலவே பொதுமுடக்கத்திலும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மாவட்டத்திற்குத் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் பயன்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவை உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகின்றனவா என கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் நவீன தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மக்களிடம் கரோனா விழிப்புணர்வு செய்துவருகிறோம். தொற்று கட்டுக்குள் இருக்கிற மாவட்டங்களில் கிடைத்த படிப்பினையைக் கொண்டு நோய்த் தொற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
சென்னைக்கு அடுத்து மதுரையில் அதிக பரிசோதனைகளைச் செய்துவருகிறோம். மதுரையில் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிய பரவை, மாட்டுத்தாவணி சந்தைகள் செயல்பட மறுஆய்வு செய்யப்படும். மக்கள் அதிகளவில் கூடும் இடங்களைக் கூடுதல் கவனம் செலுத்தி, அப்பகுதிகளில் நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்திலுள்ள பறக்கும் படைகள் மக்களிடம் கனிவோடு நடக்க வேண்டும். பொதுமுடக்கத்தில் தவறு செய்பவர்களுக்குப் புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்களுக்கு பறக்கும் படை தொற்று குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
மதுரையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 37 ஆயிரம் பேரில் அறிகுறிகள் தென்பட்டவர்களுக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்டத்தில் இரண்டாயிரத்து 165 கரோனா கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டன. அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதால்தான் அதிக தொற்றைக் கண்டறிய முடிகிறது. கரோனா நோயாளிகளைக் கடைசி நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் கைவிட்டாலும் அரசு மருத்துவமனை கைவிடாது.
கடைசி நேரத்தில் கரோனா நோயாளியை தனியார் மருத்துவனையிலிருந்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் மருத்துவமனை நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்” எனக் கூறினார்.