மதுரை: தேனியைச் சேர்ந்த ஆனந்தன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மேகமலையில் அனுமதியின்றி நடத்தப்படும் சட்ட விரோத ரிசார்ட்டுகளை அகற்றுவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் 'மேகமலை வனப்பகுதியில் அனுமதி இன்றி 10 முதல் 20 தனியார் ரிசார்டுகள் இயங்கி வருகின்றன. அதில் மனுதாரரின் ரிசார்ட்டும் ஒன்று' எனத்தெரிவித்தார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், "ஒவ்வொரு கட்டடத்தை கட்டுவதற்கு முன்பாகவும், முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. அதோடு நாங்கள் தனியார் ரிசார்ட்டை நடத்தவில்லை. தொழிலாளர்களுக்கான குடியிருப்பையே நடத்தி வருகிறோம். அதற்காக வனத்துறையினரை அணுகிய போது வனத்துறையினரின் ஆவணங்களில் எங்களுக்கு சொந்தமான பட்டா நிலம் காப்புக்காடு பகுதிக்கு அப்பாற்பட்டு இருப்பதால், அனுமதி வழங்க அதிகாரம் இல்லை எனத்தெரிவிக்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டது.
அதற்கு அரசுத்தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் இது குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஜானகியை வழக்கறிஞர் ஆணையராக நியமித்தும், அவர் தேனி மாவட்ட வனத்துறை அலுவலருடன் இணைந்து குறிப்பிடப்படும் கட்டுமானத்தின் ஆவணங்களை ஆய்வு செய்து அது ரிசார்ட்டா? அல்லது தொழிலாளர்களுக்கான குடியிருப்பா?என்பதை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதற்காக வழக்கறிஞருக்கு 50 ஆயிரம் ரூபாயை வழங்க மனுதாரருக்கும், வழக்குத் தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்ட வனத்துறை அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் தடம் புரண்டது ரயில் - ஏன் இப்படி?