நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளிலுள்ள அடிப்படை வசதிகள், தொழில்நுட்ப வசதிகள், கற்றல், கற்பித்தல் தொடர்பாக தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழு - நாக் (NAAC) ஆய்வுசெய்து தர மதிப்பீடு வழங்கிவருவது வழக்கம்.
அந்த வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழு மார்ச். 5, 6, 7 ஆகிய மூன்று நாள்கள் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
இக்குழு உயர் கல்வி நிலையங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வுசெய்து, கல்லூரிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப தர நிர்ணயம் செய்வது வழக்கம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறைகள், ஆய்வுக்கூடங்களில் உள்ள நவீன பரிசோதனைக் கருவிகள், அடிப்படை வசதிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை, பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிகளில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள், கற்பித்தல் முறைகள் தொடர்பாக நாக் (NAAC) குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுவரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் A+ அங்கீகாரத்தில் இருந்துவந்த நிலையில், தற்போது பல்கலைக்கழகத்தின் தரம் உயர்த்தப்பட்டு, A++ தரச்சான்றிதழ் நாக் (NAAC) குழுவால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.