சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த வைரசேகர் தாக்கல் செய்த பொது நல மனுவில், " தமிழ்நாட்டில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, முத்துராமலிங்கதேவர் உள்ளிட்ட பலருக்கும் பல இடங்களில் அனுமதி பெற்றும், பெறாமலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு சிலைகளுக்கு மரியாதை செய்கின்றனர்.
பல இடங்களில் இந்த சிலைகள் காரணமாக, சமூக ஒற்றுமையும் பாதிக்கப்படுகிறது. சிலை வைக்கப்பட்டவர்களின் பிறந்தநாள், நினைவுநாளன்று அவர்களுக்கு மரியாதை செய்வதாகக் கூறி, ஏராளமான கூட்டம் கூடுவதோடு, போக்குவரத்து பிரச்சினையும் எழுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சமூகப் பிரச்சினைகள் எழக்கூடாது என்பதால் சில இடங்களில் சிலைகளுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சிலைகளின் அருகில் இருக்கும் ஏணிகளை அகற்றவும், அங்கீகரிக்கப்படாத சிலைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, "சிலைகள் மரியாதை நிமித்தமாக நிறுவப்படுகின்றன. ஆனால், சமீபகாலமாக அவை கூண்டுக்குள் வைக்கப்பட்டு அவமதிப்பது போலவும், ஏதோ சிறை தண்டனை வழங்கப்பட்டது போலவும் நிறுவப்பட்டுள்ளன. பல அரசியல்வாதிகள் சிலைகளுக்கு மரியாதை செய்வதைத் தங்களின் ஆதாயத்திற்காகச் செய்கின்றனர்.
இதுபோன்ற நிகழ்வுகளின் போது, சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்" என கருத்து தெரிவித்தனர். பின்னர், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.