புதுக்கோட்டையைச் சேர்ந்த எழில் ஓவியா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,"கரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றனர். இருப்பினும், பழங்குடியின மாணவர்களுக்கு அளிக்கப்படும் சத்துணவு இல்லாததால், மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர்.
சுமார் 225 பழங்குடியினர் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் செயல்பட்டு வந்தன. கரோனா நோய்த்தொற்று காலம் என்பதால், தற்போது அவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, அங்கு படித்து வந்த மாணவர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு, அவர்கள் வசிக்கும் இடங்களில் ஆன்லைன் வசதி இல்லாததால், அவர்கள் கல்வி கற்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களில், அவர்களுக்கு உணவு அளிக்க சமுதாய சமையலறை மற்றும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆன்லைன் வகுப்பு நடத்தவும் தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை வேண்டும்.
பழங்குடியின மக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்த வனப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களை கரோனா சிகிச்சை மையமாக மாற்றவும் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இம்மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.