மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சமூக ஆர்வலர் ஒருவர் பொது நல மனுவைத் தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் உள்ளன. தியேட்டர்களில் தமிழ் உள்ளிட அனைத்து மொழியிலான திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. மேலும், பிரபலமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் புதிய திரைப்படங்களும் வெளியாகுகின்றன.
இவற்றில் முன்னணி நட்சத்திர கதாநாயகர்கள் நடித்த படங்கள் வெளிவரும்போது ரசிகர்கள் அந்த நாளை திருவிழாபோல கொண்டாடுகிறார்கள். தற்போது ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. பல ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் இது போன்ற ரசிகர்கள் என்ற போர்வையில், தங்களது உடல் நலத்தைக் கெடுத்து, பெற்றோருக்கு பல கஷ்டங்களை கொடுக்கின்றனர்.
பிரபல கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் படங்களின் சிறப்புக் காட்சிகளில் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க எந்த விதிமுறையும், கட்டுப்பாடும் இல்லை. ரசிகர் மன்றம் சார்பில் ஒரு டிக்கெட்டுக்கு ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலும் வசூலிக்கின்றனர்.
புதிய படம் வெளியிடும்போது அந்தப் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மது அருந்திவிட்டு, வாகனத்தில் சென்று போலீசாரிடம் மாட்டிக் கொள்கின்றனர் அல்லது விபத்தில் சிக்குகின்றனர். தியேட்டர்களின் முன்பு வைக்கப்படும் பேனர்கள், பல நேரங்களில் கீழே விழுந்து விபத்துகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
குறிப்பாக, ரசிகர்கள் சிறப்புக் காட்சியின்போது பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் தியேட்டர்கள் முன்பாக உள்ளேயும், வெளியேயும் ரசிகர்கள் பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ரசிகர்கள் காட்சியின்போது சென்னையில் ரசிகர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
சமீபத்தில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கம் ரசிகர்களால் சேதப்படுத்தப்பட்டது. மேலும், சில ரசிகர்கள் பறவைக் காவடி, பூ மழை, கிரேன் வாகனத்தில் முதுகில் குத்தி காவடி எடுத்து வருவதுபோல செய்கின்றனர். இது ரசிகர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
சமீபத்தில் யூடியூபர் டிடிஃப் (TTF) வாசனின் செயலை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது. காரணம், வாசனின் செயல் இளம் தலைமுறையினரைக் கெடுத்து, இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தது. இதேபோல்தான் ரசிகர்களின் இந்த நிகழ்ச்சிகள் இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை கெடுத்துவிடும்.
எனவே, தமிழகம் முழுவதும் பிரபல முன்னணி கதாநாயகர்கள் நடித்த டிரெய்லர் மற்றும் திரைப்படங்கள் வெளியிடும்போது, ரசிகர்கள் சிறப்புக் காட்சிகளின்போது தியேட்டர்கள் முன்பாக ரசிகர்களைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க:“தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடினால் மட்டும் போதாது” - தனியார் பள்ளி விதிகள் மீது நீதிபதி கருத்து!