மதுரை: மகளிர் கல்லூரிக்குச் சென்று மாணவிகளிடம் தகராறு செய்த மாணவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு. கல்லூரி மாணவர்கள் மீது குண்டர் சட்டம் ஏன் போடப்பட்டது என விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கடந்த ஆண்டு மதுரையில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்து தனியார் பெண்கள் கல்லூரி வாசல்களில் மாணவிகளிடம் தொந்தரவு செய்தனர். மேலும் மாணவியின் தந்தையை தாக்கி தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது சம்பந்தமாக அந்த கல்லூரி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்புடைய சிலரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர்களில் சிலர் கல்லூரி மாணவர்கள். ஆகையினால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த இருவர் - நிபந்தனை ஜாமீன் தந்த நீதிமன்றம்!
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, “கல்லூரி முன்பு மாணவிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும், அங்கு நின்ற சிலர் மீது தாக்குதல் நடத்தியதால்தான் இவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும், எந்தெந்த வழக்குகளில் குண்டர் சட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இவர்கள் மீது எவ்வாறு குண்டல் சட்டம் போடப்பட்டது என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து வரையறை ஏற்படுத்துவது அவசியம் என கூறி இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: திமுக எம்பிக்கு மீதான கொலை வழக்கு செங்கல்பட்டுக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!