மதுரை தோப்பூரில் கடந்த வருடம் எய்ம்ஸ் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டது. சுமார் 224.24 ஏக்கர் நிலப்பரப்பைச் சுற்றி இந்தச் சுவர் எழுப்பப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதுரை வந்த தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரை, எந்த நேரத்தில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து முறையாக நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதற்கேற்றார் போல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் சுற்றுச்சுவரில், 75 விழுக்காடு வரையிலும் பணிகள் முடிவடைந்துவிட்டன.
மூன்று முறை ஜப்பானிய ஜெயிக்கா நிறுவனம் மருத்துவமனையைப் பார்வையிட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் கூட்டத்தின் மூலம் நிதிகள் பெறப்பட்டு, வேலைகளுக்காகத் தயார் நிலையில் உள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு ஜப்பானிய ஜெய்க்கா நிறுவனத்திடம் ஒப்படைத்து, நிதிகளும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதனால் விரைவில், அதன் உள்வேலைகள் நடைபெற தொடங்கிவிடும்.
இந்தப் பணிகள் எத்தனை வருடங்களில் முடிவடையும் என தோராயமாகத் தெரியவில்லை. சரியாகக் கணக்கிட்டு பின்னர் தேதி அறிவிக்கப்படும். முதலமைச்சர் பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டவுள்ள மருத்துவக் கல்லூரிகளின் வேலைகள் துரிதமாக நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க: ஜப்பான் கப்பலிலிருந்து திரும்பிய 161 பேருக்கு கொரோனா இல்லை