மதுரை மாவட்டம் திருமங்கலம்-சோழவந்தான் சாலையில் உள்ள கீழ உரப்பனூர் கண்மாய்க்குள் நவம்பர் 19ஆம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த திருமங்கலம் நகர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளைஞர் திருமங்கலம் முகமதுஷாபுரம் ஐந்தாவது தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் அட்டாக் பிரகாஷ் (35) என்பது தெரியவந்தது.
இவரது உடற்கூராய்வில் தலை, கழுத்து, முதுகு என 24 இடங்களில் வெட்டு காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி ஆகியோர் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர்.
அதில், "கடந்த ஜுன் மாதம் புங்கன்குளம் அருகே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளியான அட்டாக் பிரகாஷ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அட்டாக் பிரகாஷ் தனது நண்பர் இளங்கோவனுடன் நவம்பர் 19ஆம் தேதி உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் உறவினர் ரமேஷ் பாபு தனது நண்பர்களுடன் அட்டாக் பிரகாஷை கொலை செய்து உரப்பனூர் கண்மாய்க்குள் போட்டுச்சென்றுள்ளனர்" என்பது தெரியவந்தது.
இந்த தகவலை அட்டாக் பிரகாஷ் நண்பர் இளங்கோவன் கொலை நடந்த இடத்திலிருந்து தப்பிவந்து காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து அட்டாக் பிரகாஷ் கொலையில் தொடர்புடைய திருமங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு (27), சுகுமார் (29), ஜெயந்தன் (22), உதயசூரியன் (40), முத்துராஜா (48) மதுரை ஆணையூரை சேர்ந்த அலெக்ஸ்குமார் (35), மதுரை திடீர் நகரை சேர்ந்த முத்துக்குமார் (35) உள்ளிட்ட 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை திருமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அட்டாக் பிரகாஷ் கொலையில் தொடர்புடைய மற்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: டாக்சி ஓட்டுனர் கொலை: நான்கு பேர் சரண்