மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் கீழ், மதுரையில் மட்டுமே மொத்தம் 1,004 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பணியின்போது செல்போன் பேசிக் கொண்டே பேருந்து ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு கிடைக்கப்பெற்ற பதிலில், “கடந்த 13 ஆண்டுகளில் மொத்தம் 205 பேர் செல்போனில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கி உள்ளனர். இதில் நான்கு ஆண்டுகளில் (2012, 2016, 2017, 2021) 6 பேரிடம் மட்டுமே அபராதமாக 2,100 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது” என கிடைத்துள்ளது.
அதேநேரம் மோட்டார் வாகன சட்டப்படி 1,000 ரூபாய் வரை பொதுமக்களிடம் செல்போன் டிரைவிங்கில் அபராதம் வசூலிக்கப்படும்போது, அரசு பேருந்து ஓட்டுநர்களிடம் மட்டும் குறைவான தொகை, குறைவான நபர்களிடம் வசூலிப்பது சரியா என காசிமாயன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் மதுரை போக்குவரத்து கழகத்தின் அனைத்து அரசு பேருந்துகளில் உள்ள முதலுதவி பெட்டிகள் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன. ஆபத்தான நேரங்களில் முதலுதவி பெட்டியில் உதவுவதற்கான எந்தவித மருந்துகளும் அவற்றில் இல்லாதது ஆர்டிஐயில் அம்பலமாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எட்டு கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 24,000 நகர மற்றும் புறநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமான நாட்களில் தினசரி 5 லட்சம் பேர் பயணிக்கின்றனா். இந்த நிலையில் மதுரை போக்குவரத்து கழக கோட்டத்தில் மட்டும் சுமார் 3,500க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநா் இருக்கையின் பின்புறம் முதலுதவி பெட்டி இருக்கும். இந்த பெட்டியை வைத்து அதில் மருந்துப் பொருள்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அனுமதி சான்றிதழை வழங்குவா். தற்போதைய சூழலில் அரசு பேருந்துகள் அனைத்தும் தனியாருக்கு நிகராக அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
குறிப்பாக பேருந்தினுள் ஏறும் பயணிகள் யாராவது காயமடைந்தால், அவா்களுக்கு அவசர உதவி செய்வதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் இதர உபகரணங்கள் எதுவும் முதலுதவிப் பெட்டியில் இல்லை. அதேபோல் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவி, விபத்து நேரிட்டால் பயணிகள் கண்ணாடிகளை உடைத்து தப்பிப்பதற்காக வைக்கப்படும் சுத்தியல் போன்றவை பெரும்பாலான பேருந்துகளில் இல்லை.
இது குறித்து காசிமாயன் எழுப்பிய கேள்வியில், 1,004 அரசு பேருந்துகளிலும் முதலுதவி பெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது என பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏறத்தாழ 3,500 பேருந்துகளுக்கும் மேல் 15 லட்சம் ரூபாய் செலவில் மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் முதலுதவி பெட்டி முறையாக வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 10இல் 8க்கும் மேற்பட்ட பேருந்துகளில் முதலுதவி பெட்டி முறையாக பராமரிக்கப்படாமலும், தேவையான மருந்துகள் இல்லாமலும் இருப்பது சில ஒட்டுநர்கள் மற்றும் நேரில் கள ஆய்வு செய்த சமூக ஆர்வலர்கள் மூலமாக தெரிய வந்துள்ளதாக காசிமாயன் தெரிவித்துள்ளார்.
முதலுதவி பெட்டியில் எந்த நேரத்திலும் பயணிகளுக்கு உதவும் வகையிலான மருந்துகள் இருக்க வேண்டும். அதனை நடத்துநா் எடுத்து வழங்கும் வகையில் பெட்டி வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான முதலுதவி பெட்டியில் மருந்துகள் ஏதுமின்றி வெறும் காட்சி பொருளாகவே உள்ளது.
முதலுதவி பெட்டி பெரும்பாலும் காலியாகத்தான் இருக்கும். இதற்கு முன்பெல்லாம் 200 ரூபாய் மதிப்புடைய மருந்துகள் வழங்கப்படும். தற்போது எதுவும் வழங்கப்படுவதில்லை என தனது கள ஆய்வில் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளதாக சமூக ஆர்வலர் காசிமாயன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அள்ளிக் குவித்த சிறப்பு ரயில்கள் - ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்!