சீனாவிலிருந்து ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகம் வந்துள்ள பயணிகள் சொகுசுக் கப்பலை கரோனோ வைரஸ் காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக அந்நாட்டு அரசு சிறைப்படுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக அந்தக் கப்பலுக்குள் உள்ள பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையே அக்கப்பலில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் நமது ஈடிவி பாரத் மதுரை செய்தியாளரிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, தொடக்கத்தில் சாதாரணமாகவே நினைத்திருந்தோம். ஆனால் தற்போது நாங்கள் கேள்விப்படுகின்ற விசயங்கள் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. இங்கே நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
முதலில் கரோனா வைரஸால் 10 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். பிறகு 60 என்றும் தற்போது 120க்கும் மேற்பட்டோர் எனவும் கூறுகிறார்கள். தற்போது இங்குள்ள இந்தியர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் உடனடியாக மீட்காவிட்டால், நாங்களும் பாதிக்கப்படுவோம் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'தற்போது இந்தக் கப்பலில் நாங்கள் பணி புரிந்தாலும் எங்களது குழுவில் 50 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாளர்களாக உள்ளனர். அவர்களில் 6 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கப்பலின் முழு நிர்வாகப் பொறுப்பும் நாங்கள் பணியாற்றும் நிர்வாகத்திடமிருந்து ஜப்பான் அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின் பேரில் சிக்கலை சீர் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதேபோன்ற சிக்கல் சீனாவில் நிகழ்ந்தபோது ஏர் இந்தியாவை அனுப்பி இந்திய அரசு இந்தியர்களை மீட்டது. அதேபோன்று எங்கள் அனைவரையும் மீட்பதற்கு இந்தியா முன் வர வேண்டும்' என்றார்.
மேங்கு வங்காளத்தைச் சேர்ந்த வினய்குமார் கூறுகையில், 'எங்களுக்கு இந்த வேலை இல்லையென்றால் வேறொரு வேலையை தேடிக் கொள்ள முடியும். ஆனால், உயிர் போனால் முடியுமா..? தற்போது இங்கே ஒரே இடத்தில் அடைத்து வைத்திருப்பதால், இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்புண்டு. தற்போது ஜப்பானிய அரசு உணவு, தண்ணீர் என எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது. ஆனால் உயிர்பிழைக்க வேண்டுமே. அதுதான் முக்கியம்.
ஆகையால் இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு எந்தவித பாதிப்புமற்ற இந்தியர்களை உடனடியாகக் காப்பாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க...வித்தியாசமான தலைக்கவசம் அணிந்துவந்தவரிடம் விசாரணை நடத்திய போலீஸ்