மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வில்லாபுரம் பகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு 300க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு கரோனா நிவாரணத் தொகுப்பினை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், 'அம்மா உணவகம் மூலமாக 12 வகையான உணவுகள் குறைவில்லாமல் வழங்கப்படுகிறது. நியாய விலைக் கடைகள் மூலம் 20 கிலோ அரிசி வாங்கியவர்களுக்கு 40 கிலோ அரிசி, 25 கிலோ அரிசி வாங்கியவர்களுக்கு 50 கிலோ அரிசி, 75 கிலோ அரிசி வாங்கியவர்களுக்கு 150 கிலோ அரிசி வரை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இதுபோல் எந்த அரசும் செய்தது இல்லை.
வீட்டிலிருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை முதலில் கூறட்டும். நிதிநிலை பொறுத்துதான் செய்ய முடியும். வாக்கு வங்கிக்காக ஸ்டாலின் இவ்வாறு பேசி வருகிறார். மக்கள் தான் எங்களது எஜமானர்கள், ஓட்டுக்காக நாங்கள் செய்யவில்லை. திமுக தலைவர் ஒருவர் தான், ஓட்டுக்காக இதை கொடுக்கிறோம் என்று கூறுகிறார்.
மேலும், விவசாயிகளுக்குத் தேவையான உரம் தயாராக இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் கொடுக்கவும் அரசு தயாராக உள்ளது. ரூ.11,000 கோடி விவசாய கடன் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக 5 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 163 கோடி தான் விவசாயிகளுக்கு கடன் வழங்கி உள்ளது. ஒரே ஆண்டில் 11 ஆயிரம் கோடி கடன் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதுமட்டுமின்றி ஏதும் குறிப்பிட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு உரம், மானியத்தில் தட்டுப்பாடு இருந்தால் கூறலாம். அதனை உடனடியாக சரி செய்வோம்' எனக் கூறினார்.
இதையும் படிங்க...ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்- தமிழக அரசு ஆணை