கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாத் தொடங்கியது. இவ்விழாவையொட்டி கோயிலில் மீனாட்சியம்மனின் குழந்தை பருவம் முதல் கல்யாண வைபவம் வரையிலான பொம்மைகள், கிருஷ்ணன், சிவபெருமானின் லீலைகளை விளக்கும் பொம்மைகள், இராமர் பட்டாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விதமான கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதை பக்தர்கள் பார்வையிட்டு ரசித்தனர். மேலும் ஒவ்வொரு நாளும் மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவு, பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் மதுரை வீணை இசை வழிபாட்டு மன்றத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இணைந்து, கல்வி, செல்வம், மழை, நோயில்லா வாழ்வு வேண்டி 108 வீணை இசை வழிபாடு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தனியார் இசைக் கல்லூரி முதல்வர் மல்லிகா, இசைப் பேராசிரியர் மேனகா, ஓய்வு பெற்ற இசைப் பேராசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வீணை இசை வழிபாட்டைத் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் அரசு இசைப்பள்ளிகளின் ஆசிரியைகள், மாணவிகள் வீணை இசைத்தனர்.
இந்நிகழ்வு குறித்து பேராசிரியை விஜயலட்சுமி கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி கலைவிழாவில் 108 வீணை வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் ஆன்ம ஞானம் பெறுவதோடு, உலக நன்மைக்காக கலைவாணியிடம் வேண்டுதல் செய்வதும் நடைபெற்றது" என்றார்.
இதையும் படியுங்க: