கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனோ வைரஸ் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல அளவிலான மாவட்ட கண்காணிப்புக் குழுவின் பொறுப்பு அலுவலரான தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சுநாதா ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
அப்போது பேசிய கிர்லோஷ்குமார், "மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனைச்சாவடிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். வெளிமாநில தொழிலாளர்கள், உணவின்றி தங்கவைக்கப்பட்ட ஆதரவற்றோர் ஆகியோருக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அவசியத்தை கண்காணிப்புக் குழுவினர் வலியுறுத்த வேண்டும்.
மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் உள்ள சளி, ரத்தம் போன்ற பரிசோதனைகள் மலைவாழ் மக்கள் இருக்கும் இடத்தில் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்கள் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் வந்து சோதிக்கும் கால தாமதத்தை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் மூலம் அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.
உணவுப் பொருள்கள் தடையின்றியும் முறையான விதிமுறைகளுக்குள்பட்டு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லை மாவட்டமாக உள்ளதால் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:கரோனாவால் ஒரு நிம்மதி... நிரந்தரமானால் நல்லது! - செயல்படுத்துமா அரசு?