கிருஷ்ணகிரி பழையபேட்டை மேலத்தெருவைச் சேர்ந்த பவுன்ராஜ்(27), ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் மற்றொருவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதையடுத்து சமாதானம் பேச்சுவார்த்தைக்காக கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம் அருகில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றிற்கு இன்று (ஆகஸ்ட் 2) மதியம் பவன்ராஜ் வந்தார்.
அதே நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், பவன்ராஜை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், பலத்த காயமடைந்த பவுன்ராஜ், அங்கிருந்து ஓடி துறிஞ்சிப்பட்டியில் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு அருகில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதைப்பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், பவுன்ராஜ் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து மருத்துவமனை முன்பு குவிந்த அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதன்பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ரவுடி ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியீடு!