கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (24). இவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து பத்து நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த ஜெயராமன், பூரண குணமடைந்து நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே வீட்டுக்குச் செல்லும் வழியில் மீண்டும் ஜெயராமன் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மீண்டும் அவரை அந்த மருத்துமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் திடீரென ஜெயராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நன்றாக இருந்தவர் திடீரென மருத்துவமனையில் உயிரிழந்தததை அடுத்து, அவரது உறவினர்களில் சிலர் மருத்துவமனைக்குள் புகுந்து செவிலியர்களை மிரட்டியதோடு, அங்கு இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மருத்துவமனையில் ரகளையில் ஈடுப்பட்டதாக மூன்று பேரைக் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞரின் உறவினர்களிடையே, சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பூச்சுமருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞர் உயிரிழந்தததை அடுத்து, அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ‘என்னை தேடி வந்த பெண்களுடன் ஜாலியாக இருந்தேன்’ - காசியின் வாக்குமூலம்