கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம் செயல்பட்டுவருகிறது.
சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கெலமங்கலத்தைச் சுற்றியுள்ள நாகமங்கலம், உள்ளுகுறுக்கை, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, காட்டுப் பகுதியான உனிசெட்டி, தடிக்கல் பெட்டமுகலாலம் பகுதிகளிலிருந்து கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் உள்ளிட்டோர் உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர்.
கடந்த இரு தினங்களாக கனமழை பொழிந்துவருவதால், சிதிலமடைந்த இந்தக் கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து தண்ணீர் உள்புகுந்து சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் மீது விழுகிறது. இதனால், நோயாளிகள் கடும் உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். சிகிச்சைப் பெற்றுவரும் பெண்கள் கடும் குளிரில் அவதிப்பட்டுவருகின்றனர். அத்துடன், சுவர்கள் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளன. இதனால் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், பொது சுகாதார ஊழியர்கள் மிகவும் அச்சத்துடன் பணிபுரிந்துவருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்குப் முன் பிரசவித்த பெண் ஒருவர், கடும் குளிருக்கு நடுவே தனது பச்சிளம் குழந்தையுடன் சிதிலமடைந்த அந்தக் கட்டடத்தில் தங்கி சிகிச்சைப் பெற்றுவரும் காணொலி வெளியாகியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவிவருகிறது.
50 ஆண்டுகள் பழமையான மருத்துவமனை கட்டடத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதுப்பித்துதர அரசு உரிய நிதி ஒதுக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : ’பட்டியல் இனத்தை இழிவுபடுத்துகிறார் அமைச்சர் வேலுமணி’