கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், தென்பெண்ணை ஆற்றினை ஒட்டியுள்ள கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் எச்சரித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் நீர்நிலைகளின் அருகில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாமென எச்சரிக்கைப் பலகை வைத்தும் உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் கெலவரப்பள்ளி அணையிலிருந்து மேலும் விநாடிக்கு ஆயிரத்து 368 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதால், தென்பெண்ணை பாயும் மோரனப்பள்ளி, பேரண்டப்பள்ளி, கோபசந்திரம், பாத்தகோட்டா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
எச்சரிக்கையும் மீறி பாத்தகோட்டா தரைப்பாலத்தின் மீது ஆர்ப்பரித்து செல்லும் நீரை பார்வையிட வரும் சிறுவர்கள், பெண்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி குளியலிட்டு வருகின்றனர்.
மேலும் வாகன ஓட்டிகளும் தங்களுடைய வாகனங்களை கழுவுவதற்காக ஆற்றில் இறங்குவதும், இளைஞர்கள் செல்ஃபியும் எடுத்துவரும் செயல் மாவட்ட நிர்வாகத்தை அதிருப்தியடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் வாகனங்கள்!