கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள புளியரசியைச் சேர்ந்தவர்கள் முனிராஜ்(28), ராஜேந்திரன்(40). உறவினர்களான இவர்கள் இன்று (ஆகஸ்ட் 16) காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள வனப்பகுதி ஒட்டிய விளைநிலங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு சுற்றித்திரிந்த காட்டு யானை இருவரையும் தங்கியது. இதில், முனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேந்திரன் படுகாயமடைந்தார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வனத் துறையினர் உயிரிழந்த முனிராஜ் உடலை எடுக்க முயன்றனர்.
அப்போது, முனிராஜின் உறவினர்கள் அவரது உடலை தர மறுத்து, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த சூளகிரி வட்டாட்சியர் பூவிதன், ஓசூர் டிஎஸ்பி முரளி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், காட்டு யானைகளால் இனி பொதுமக்களுக்கு எவ்வித சேதமும் வராது என வனத் துறையினர் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர், அவரது உடலை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.