கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி என்ற மலைப்பகுதி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 2018-19ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர் விசுவநாதன். அதே கிராமத்தில் வசித்துவரும் அந்த மாணவர், ஆசிரியர்கள் உதவியோடு முதல் நீட் தேர்வை சந்தித்து 198 மதிப்பெண்கள் பெற்றார்.
தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் மதிப்பெண் குறைவு காரணமாக மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. இரண்டாவது முயற்சியாக ஆசிரியர்கள் உதவியோடு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்த அந்த மாணவர், இந்த ஆண்டு நீட் தேர்வில் 505 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவரின் முயற்சிக்கு, மாவட்ட கல்வி அலுவலர் முருகன், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு வழங்கக் கூடிய நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகளில் நடைபெறுவது இல்லை என்றும், இதனால் அரசு வழங்கும் பயிற்சியை பெற முடியாத சூழல் இருப்பதாகவும் மாணவர் விசுவநாதன் தெரிவித்துள்ளார். கல்வித்துறை, மலை கிராமங்களில் இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகளிலும் இத்தகைய பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க...கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!